Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
சுந்தரி கண்ணால் ஒரு சேதி.... பிரமிப்பு !!!
By General | 2013-12-20 10:02:50

-அ. கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா -


இந்த புகைப்படம் 1991 இல் வெளிவந்த தளபதிப் பாடலான சுந்தரி கண்ணால் ஒரு சேதி.. என்ற பாட்டு இப்போதைய மும்பாயிலும் அப்போதைய பம்பாயிலும் பதிவு பண்ணிக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்டது .

 

இந்தப்பாட்டைப் பற்றி இசைஞானியும் பாடிய பாலுவும் இரு முக்கியமான தகவல்களைக் கூறியிருந்தார்கள். இந்தப் பாட்டின் மெட்டுக்கு கன கச்சிதமாக ஐயா வாலி பாட்டெழுதிய வித்தகத்தைப் பற்றி இசைஞானியும், மும்பாய் ஒலிப்பதிவுக் கூடம் ஒன்றில் இந்தப் பாடல் பதிவு நடந்த போது ராஜாவின் இசைக்குறிப்பை படித்து, வியந்து, இசைத்து முடிந்ததும், மகராஷ்டிரா இசைக்கலைஞர்கள் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டியதை பார்த்து, தான் பரவசப் பட்டதைப் பற்றி பாலுவும் கூறியதை நாங்கள் பலர் கேட்டிருக்கலாம்.

 

இந்தப் பாட்டின் இன்னும் பற்பல விடயங்கள் என்னைப் பிரமிக்க வைத்துக் கொண்டேயிருக்கின்றன.

 


பல்லவியில் தாள வாத்தியமே பாவிக்கப்படவில்லை.
பின்னணியில் அலை அலையாக எழும் வயிலின்களின் ஆர்ப்பரிப்பு எனக்கு கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பையே நினைவு படுத்துகின்றன....

 

இடையிசையில் முதலில் ட்ரம்ஸ்களுடன் மிக அமைதியாக ஆரம்பிக்கிறார் இசைஞானி. அந்த அமைதியான ஆரம்பம் புயலுக்கு முந்திய அமைதியைப் போன்றே எனக்குத் தோன்றுவதுண்டு. அவற்றுடன் வந்து சேர்ந்து கொள்ளும் ட்ரம்பெற்களின் ஆக்ரோஷம்.. அதன் பின் அவை அடங்கிப் போதல், அவைக்குப் பதிலாக ஆர்ப்பரிக்கும் வயிலின்கள் கோரஸ் கூட்டணி என்று பயணிக்கும் அந்த இசைப் பிரமாண்டம் சிறு வயதில் நான் பார்த்துப் பிரமித்த பென்ஹர் என்ற ஆங்கிலப் படத்தின் பிரமாண்டத்துக்கு (என்னைப் பொறுத்தவரை ) ஒப்பானது. அந்த இசைப் பிரமாண்டம் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக சாந்தமாகி தப்லாவுக்கும் பின் சரணத்துக்கும் வழிவிடும் அழகு .அப்பப்பா..அதுதான் ராஜா அழகு.

 

இந்தப்பாட்டைப் பாடிய பாலுவும் ஜானுவும் வேறு கலக்கியிருக்கிறார்கள். காதலால் படும் வேதனையை விபரிக்கும் இந்தப் பாட்டின் முதலாவது சரணத்தின் இடையில் வரும் வார்த்தைகளை , கவிஞர் வாலி " வான் நிலவை நீ கேளு கூறும் என் வேதனை " என காதலன் பாடுவதாக எழுதியுள்ளார். இந்த வார்த்தைகளை பாலு எப்படிப் பாடியிருக்கிறார் என்பதைக் கவனியுங்கள்.:

 

வான் நிலவை என்பதை சாதாரணமாகப் பாடும் பாலு " நீ" என்பதில் ஒரு பொடி சங்கதியும் "கேளு" என்பதை கே..ளூ..என்றும் ,கூறும் என் வேதனை என்பதில் வரும் " வேதனை" என்பதை " வேஃதனை" என்று அருமையான சங்கதி போட்டதன் மூலம் அந்த வார்த்தையின் அர்த்தத்தை... வேதனையை வேதனையுடன் பாடி ராஜாவின் இசைக்கற்பனையை இன்னும் செதுக்கி அதை முழுமையடையச் செய்கிறார். இதுதான் பாலு ராஜா கூட்டணியின் வெற்றி. இதைத்தான் mutual understanding என்பது. இனி ஒரு போதும் கிடைக்காத கூட்டணி இது என்பதை மீண்டும் ஆணித்தரமாக இங்கே பதிகிறேன்.

 

இதே போலவே பலத்த வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது இரண்டாம் இடையிசை.

 

இதில் இன்னொரு விடயத்தையும் நான் குறிப்பிட்டே ஆகவேண்டும். அதாவது பல்லவியிலும் இடையிசையிலும் அதிகாரம் செலுத்தும் வயிலின் கூட்டணி, சரணத்தில் அடங்கி விடுகின்றது. ஆனால் சரனம் முடிந்து பல்லவிக்கு மீண்டும் பாடல் திரும் பும் போதும், அதற்கு முன் ஜானகி பாடும் " என்னையே தந்தேன் உனக்காக ..ஜென்மமே கொண்டேன் அதற்காக " என்ற வரிகளின் போதும் மீண்டும் நாசுக்காக பாட்டின் பின்னணியில் ஒலிக்கத் தொடங்கும் வயலின் கூட்டணி, ஒவ்வொரு முறை பல்லவி பாடும் போதும் பின்னால் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றது. இந்த வயிலின்களின் கூட்டணிதான் எம்மையறியாமலேயே நாம் இந்தப் பாட்டுக்குள் கிறங்கிப் போவதற்கு முக்கிய காரண‌ம்.

 

ராஜாவின் இந்த இசை சூட்சுமத்தை அவரின் பல பாடல்களில் கேட்கலாம். அவரின் வெற்றியின் ப்ல சூட்சுமங்களில் இது முக்கியமானது என நான் உறுதிபட நம்புகின்றேன்.
 


இவற்றைவிட இன்னும் ஏராளமான , எவ்வளவோ விடயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இவையெல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக எனக்குத் தோன்றுவது புல்லாங்குழல் இசைதான்.

பாட்டின் தொடக்கத்தை பல வயிலின்களின் கூட்டணியுடன் நடு நாயகமாக வந்து அட்டகாசமாக . ஆரம்பித்து வைக்கிறது புல்லாங்குழல் . அதன் பின் பல்லவியின் ஒவ்வொரு வார்த்தைகளின் முடிவிலும் 4 தடவைகள், கொஞ்சம் வித்தியாசமான ஒலியுடன் மீண்டும் வருகின்றது புல்லாங்குழல் .


ஒருவேளை இரு வேறுபட்ட புல்லாங்குழல்களை இந்த இசை வித்தியாசத்தையும் அதன் மூலமான உணர்வு மாற்ற‌த்தை ஏற்படுத்தும் முகமாக இசைஞானி பாவித்திருக்கக் கூடும்.


இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், . இந்த நாலு தடவையும் அது எந்தவிதமான உணர்ச்சியை பாடலுக்குள் புகுத்துகின்றது என்பதைத்தான். பாடலின் வார்த்தைகளையும் அதைத் தொடர்ந்து அந்த வார்த்தைகளுக்கேற்ப புல்லாங்குழல் என்ன ஜாலங்களை செய்கின்றது என்பதையும் அடுத்துப் பாருங்கள்:

 

" சுந்தரி கண்ணால் ஒரு சேதி...( புல்லாங்குழல் வெட்கப் படுகிறது, அல்லது வியப்பை வெளிப்படுத்துகிறது )

சொல்லடி இந்நாள் நல்ல தேதி....( புல்லாங்குழல் சிணுங்குகிறது )

என்னையே தந்தேன் உனக்காக...( அதே நாணம் )

ஜென்மமே கொண்டேன் அதற்காக ( அதே சிணுங்கல் )

 

உண்மையில் இது ஒரு விதமான உரையாடல் . பாலுவுக்கும் ஜானகி அம்மாவுக்கும் , புல்லாங்குழல் தன்பாட்டுக்குப் பதில் சொல்லிக் கொண்டே போவதாகவே எனக்குப் படுகின்றது.

 

இந்தப்பாட்டு வெளிவந்து 23 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் எனக்குத் தெரிய இந்தப் பாடலைப் பற்றி இது வெளிவந்த காலத்தில் இதன் இனிமையைத் தவிர்த்து இதற்குள்ளிருக்கும் இசைச் சூட்சுமங்களைப் பற்றி எவரும் பெரிதாக அலட்டிக் கொண்டதாக எனக்கு நினைவில்லை. ஆனால் சமீப காலங்களாக எஸ்.பி.பாலு அடங்கலாக பலர் இது ஒரு மிகச் சிறந்த இசைச் சேர்க்கை என க் கூறத் தொடங்கியுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ள‌து.

 

ஏன் அப்படி ? இந்தப் பாட்டு மிகச் சிறந்த கொம்பொசிஷனாக இருந்திருந்தால் இன்றைக்கு 22 வருடங்களுக்கு முன்னரேயே நாம் ஏன் இதைக் கொண்டாடாமல் இப்போ தூக்கிப் பிடிக்கிறோம் ? அதற்கான விடை ஒன்றே ஒன்றுதான். இந்தப் பாடல் வெளிவந்த போது எமக்கிருந்த இசையறிவு வரையறுக்கப் பட்டது. அது இதன் சூட்சுமங்களை அறியப் போதுமானதாக இருக்கவில்லை. ஆனால் கடந்த இரண்டு தசாப்தமாக எமக்குள் ஏற்பட்ட வளர்ச்சியும் சர்வதேச
இசைகளைக் கேட்டும் படித்தும் பெற்ற பட்டறிவும், இப்போ இந்தப் பாடலைக் கேட்கும் போது மலைக்கவும் வியக்கவும் வைக்கின்றது.

 

இது 1991 இல் காலம் கடந்து போடப்பட்ட பாட்டு. இதில் இசைஞானியுடன் சேர்த்து அத்தனை இசைக்கலைஞர்களும் மனதாரப் பாராட்டப் பட வேண்டியவர்கள். முக்கியமாக புல்லாங்குழல் கலைஞன்  நெப்போலியன் செல்வராஜ்.

 

(படம்: நன்றி நண்பர் எடி தினேஷ் )

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
Saravanan2014-11-11 09:28:48
Raja Raja Thaan. இசை thaan raja raja thaan இசை.
0
0
saisankar g2014-03-13 23:10:44
ராஜா ராஜாதான்
0
0
T.G.Rameshnath2014-01-08 22:27:11
உலகம் உள்ள வரை ரசிக்கும் இசை ராஜாவின் இசை.
0
2
Joseph Raja2014-01-03 01:50:10
அழகு... பிரமாதம்
0
2
SPB ரசிகன் 2014-01-02 11:09:21
இசைகலைஞர்களின் உதவியுடன் இளையராஜாவின் இசையமைப்பும் இசைக்குயில் ஜானகி சாதனைப் பாடகன் பாடும் நிலா SPB ஆகியோரின் இனிமையான குரலில் பாடலை கேட்டு மகிழ்ந்ததுண்டு. இந்தக் கட்டுரை படித்ததிலிருந்து பாடலுக்கு மேலும் கவனம் செலுத்துகிறேன் பாடல் மேலும் சுவை தருகிறது. கலைசெல்வனுக்கு பாராட்டுக்கள்.
0
1
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்2013-12-22 23:19:49
எனக்கு விருப்பமான பாடல்களில் ஒன்றுதான் இது. பாடலின் இசையமைப்பு எஸ்.பியின் குரல் வளம் இவை இரண்டடுமே இந்தப் பாடலுக்கு அணி சேர்த்து என்னைக் கவர காரணமாகின. இளையராஜாவின் இசையமைப்பு இந்தப் பாடலை இமயம் வரை உயர்த்தி நிற்பதாக நான் இதுவரை நினைத்திருந்தேன். ஆனால் எனது நினைப்பில் கொஞ்சம் தப்பு உள்ளது என்பதனை இந்தச் சிறப்பான கட்டுரை மூலம் தெரிந்து கொண்டேன். இந்தப் பாடலுக்கு இளையராஜாதான் இசையமைத்தார் என்றாலும் அந்த இசையை அசைத்தவர்களின் திறமை கண் மெச்சிப் போனேன். இசைக் கருவிகளை இசைப்பவர்களும் கைகளால் அசைப்பவர்களும் ஒரு பாடலின் பிரசவத்துக்கு மருத்துவிச்சிகள் போன்று செயற்படுகிறார்கள் என்பதனை நான் இந்தக் கட்டுரை மூலம் தெளிவு கொண்டேன். கட்டுரையாளர் அ. கலைச்செல்வனுக்கு எனது பாராட்டுகள். இவ்வாறன கட்டுரைகளை அவர் தொடர்ந்து தரவேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.
0
4
K.mirun2013-12-20 19:19:28
அருமையான ஆக்கம்
0
3
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.