Wednesday  25 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
புல்லாங்குழலிசையை தனது தேடலால் நவீனமாக்கிய நவீன் குமார்
By General | 2014-02-03 12:03:03

'என்னவளே அடி என்னவளே' பாடலுக்கு புல்லாங்குழல் வாசித்த கலைஞர்

 

 

-அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா


 காதலியின் வருகைக்காக காதலன் காத்திருக்கின்றான். நேரம் போனதே தவிர அவள் வரவில்லை. வேதனையிலும் விரக்தியிலும் பாடுகிறான். அவ்வேளையில் தனது மதம் குடும்பம் சுற்றார் எல்லாவற்றையும் விட தனது காதல்தான் முக்கியம் என முடிவெடுத்த காதலி ஒருவாறாக காதலன் குறிப்பிட்ட இடத்துக்கு ஓடிவருகிறாள். அதுவரை ஹீரோ பாடுவதையே காட்டிவந்த கெமரா அப்போதுதான் முதன் முதலாக ஓடிவரும் காதலியைக் காட்டுகிறது. அதற்கு பின்னணியாக ஒற்றைப் புல்லாங்குழல் 1;34 நிமிடத்தில் இருந்து 2:00 நிமிடம் வரை ஓங்கி ஒலிக்கிறது. அந்த ஒலியில் காதலின் தவிப்பு, காதலனின் வேதனை எல்லாவற்ரையும் மொழிதெரியாதவரால் கூட சொல்லமுடியும் அதைத் தந்தவர் நவீன் குமார். பாடல்: உயிரே.. வந்து என்னோடு கலந்துவிடு... படம்: பம்பாய்.

 

 

பி.எம்.கே.நவீன் குமார் ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் 1. 1, 1965 ஆம் திகதி பிறந்தவர். தனது 13ஆவது வயதிலேயே எவரிடமும் பயிலாமல் கேள்வி ஞானத்தில் புல்லாங்குழலை இசைக்கத் தொடங்கிய இவர் தப்லா கலைஞரான இவரது அண்ணன் ஜோதியுடன் சேர்ந்து, அண்னன் தப்லா வாசித்த உள்ளூர் இசைக்குழுக்களுக்கு புல்லாங்குழல் வாசிக்கத்தொடங்கினார். இருவரும் சிறிது காலத்திலேயே விசாகப்பட்டின வானொலியில் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்..

 

 

1983 இல் தமிழ் நாட்டுக்கு சென்றால்தான் சினிமாவுலகில் முன்னணிக்கு வரமுடியும் என முடிவெடுத்து தனது தந்தையுடனும் அண்ணனுடனும் தமிழ்நாட்டுக்கு வந்து இசைஞானியை சந்தித்து அவரது படங்களுக்கு இசைக்கத் தொடங்கினார். அதில் குறிப்பிடக் கூடியது மைடியர் குட்டிச் சாத்தான்.

 

நவீன் என்ற சாதாரண புல்லாங்குழல் கலைஞரை உலகுக்கு அடையாளம் காட்டியவர் ஏ.ஆர்.ரஹ்மான். அவரது இசையில் 1992 இல் வெளிவந்த முதல் படமான ரோஜாவிலேயே நவீனின் காலம், ராஜ்ஜியம் தொடங்கியது என்றால் மிகையல்ல. அதில் வெளிவந்து எல்லோரையும் கவர்ந்த மிகப் பிரபலமான சின்னச் சின்ன ஆசை என்ற பாட்டின் ஆரம்ப இசையை Pan flute என்ற புல்லாங்குழல் மூலம் வாசித்துள்ளார் என எனது சிற்றறிவுக்கு தோன்றுகிறது.

 

அதே புல்லாங்குழலை பாட்டின் இடையிடையேயும் மின்மினியின் குரலுக்கு பின்னணியாக பாவித்துள்ளார்.

 

 

ஆனால் இடையிசையில் சாதாரண புல்லாங்குழலையே உபயோகித்துள்ளார். (இந்த Pan flute இனைத்தான் எம்.எஸ்.விஸ்வநாதன், பயணம் என்ற படத்தில் இடம்பெற்ற பயணம்..பயணம்.. என்ற பாட்டில் அதன் முதலாவது இடையிசையிலும் பாவித்துள்ளார்.)

 

அதே படத்தின் 'காதல் ரோஜாவே' என்ற எஸ்.பி.பி யின் அற்புதமான மெலடியின் ஆரம்ப இசையில் சுஜாதாவின் ஹம்மிங்கிற்குப் பின்னே சேர்ந்து செல்கிறது இவரது வேதனை இழையோடும் புல்லாங்குழல்.

 

இதில் முதலாவது இடையிசையைக் கவனியுங்கள்... இவரின் கற்பனை வளம் அப்போதே தொடங்கிவிட்டதைப் புரிந்து கொள்ளலாம். 5:08 நிமிட நீளம் கொண்ட இந்தப் பாட்டின் முதலாவது இடையிசையில் 1:27ஆவது நிமிடத்தில் இவரின் புல்லாங்குழல் உள்நுழைந்து 3 செக்கன்கள் செல்கின்றது.

 

இது மேற்கத்தேய புல்லாங்குழல் அல்லது அமைப்பில்பெரிய புல்லாங்குழலின் ஒலியைக் கொண்டிருக்கிறது. அது தனன..தனன..தனன..தனன.. என்ற கேள்வியை மூன்று செக்கனில் எழுப்பவும் அதற்குப் பதில் சொல்லுமாப் போல் இன்னொரு இசையைக் கொண்ட புல்லாங்குழல் தனனா....ந...தானா.ந. என்று பதிலளிக்கிறது. இது இரு தடவைகள் நடக்கின்றது. அவைகளின் உரையாடல் முடிந்ததும் கோரசும் பின்னணி இசையும் மீண்டும் தொடர்வதைக் கேட்டு ரசியுங்கள் அற்புதமான, புல்லாங்குழல்கலின் மொழியது.

 

அதற்குப்பின் ரஹ்மானின் ஆஸ்தான புல்லாங்குழல் கலைஞராகவே ஆகிப்போன நவீன் அவரின் எல்லாப் பாடல்களுக்குமே பணிபுரிந்துள்ளார்.

 

சாதாரண கலைஞராக தென்னிந்திய இசை உலகிற்கு மட்டுமே தெரிந்திருந்த அவரை, உலகெல்லாவற்ரையும் திரும்பிப்பார்க்க வைத்தவர் ரஹ்மான். பம்பாய் படத்தில் இடம்பெற்ற தீம் (Theme)  இசையில் இவரின் புல்லாங்குழல் வகித்த முக்கிய பங்கானது, இவர் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் என்பதை உலகுக்கு நிரூபித்தது.

 

 

இந்தத் தீம் இசை உருவாக்கத்தைப் பற்றி நவீன் நினைவு கூரும் போது, ரஹ்மான் தன்னிடம் பம்பாய் தீமைப் பற்றி கூறும்போது 'மழைத்துளியொன்று இலையில் பட்டு பின் அந்த இலையிலிருந்து மெதுவாக நிலத்தில் வீழ்வதைப்போன்றதான உணர்வைக் கொண்ட இசை வேண்டும்' என்று  சொல்லியே அந்த இசையின் உருவாக்கத்துக்கு வழிவகுத்ததாகக் கூறினார். ஏ,ஆர். ரஹ்மானின் இசை ஆழத்தைப் புரிந்து கொள்வதற்கு இந்தச் சம்பவம் நல்லதொரு எடுத்துக் காட்டு.

 

 

காதலனில் இடம்பெற்ற என்னவளே..அடி என்னவளே என்ற தேசிய விருதுப் பாடலை தொடக்கியதும் இவரின் Pan flute  தான் . இரண்டாவது இடையிசையில் இவர் வாசித்த வேகத்துக்கு பிரபு தேவா சேஷ்டைகள் செய்து அருமையான இவரின் வாசிப்பைக் கொச்சைப் படுத்தியதைப் பார்த்து கோபப் பட்டவர்களில் நானும் ஒருவன். அதில் குரங்கின் கையில் அகப் பட்ட பூமாலையைப் போன்று காட்சி அமைக்கப்பட்டதானது இவரின் இசைக் கற்பனை இயக்குனராலும், நடிகராலும் உணரப்படவில்லை என்பதைக் காட்டியது.

 

 

 

தொடர்ந்து ஜீன்ஸ் என்ற படத்தில் உலக அழகியைப் புகழ்ந்தது நவீனின் புல்லாங்குழல். அதில் பூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் என்ற உலக அதிசயங்கள் எல்லாவற்றையும் காட்டிய பாடலை அழகாக அழகிய ஐஸ்வர்யாராயுடன் ஆரம்பித்து வைத்தது நவீனின் சீன புல்லாங்குழல்.

 

இந்தப் பாடல் சீனப் பெருஞ்சுவரில் இருந்து ஆரம்பிப்பதால் அதற்கு சீன புல்லாங்குழலைப் பாவித்திருப்பதாக எடுத்துக் கொள்ளலாம். இடையிசையில் அழகாக ஒலிக்கும் புல்லாங்குழலை ஐஸ்வர்யா ராயின் அழகிற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் ஷங்கர் படமாக்கும் போது கவனிக்காமல் விட்டுவிட்டாரோ என்ற ஆதங்கம் எனக்குண்டு.

 

ரஹ்மானின் எல்லாப் பாடல்களிலுமே இவரின் பங்கிருப்பதால் எல்லாவற்றையும் பட்டியலிட முடியாது. கண்டு கொண்டேன்..கண்டு கொண்டேனில் ஷங்கர் மகாதேவனுக்கு விருதை அள்ளிக் கொடுத்த 'சந்தனத் தென்றலை...' என்ற பாட்டில் இவரின் வாசிப்பு சோகத்தின் உச்சம் என்றால் 'அலைபாயுதேயில்' இடம் பெற்ற 'பச்சை நிறமே..பச்சை நிறமே' அழகிய, மனதுக்குப் புத்துணர்ச்சியூட்டும் தொடக்கம். இளசுகளின் றிங்ரோன்.

 

ரஹ்மானின் இசை மூளையும் – நவீனின் இசை மூச்சும் கூட்டணியாகச் சேர்ந்து கட்டிய இசைக் கோட்டைகள் மிகப் பலமானவை அவர்களின் வெற்றிக் கூட்டணியைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

 

ரஹ்மானைத் தவிர்த்து இவர் ஹரீஷ் ஜெயராஜ், தேவா போன்றோருக்கும் வாசித்திருக்கிறார். ஹரிஷின் மாஸ்டர் பீஸான 'வசீகரா...' என்ற 'மின்னலே' பாட்டின் தொடக்க இசையை வாசித்தவர் இவர்தான். அதே படத்தின் சூப்பர் ஹிட்டான 'ஏ..அழகியதீயே..' என்ற பாட்டின் இளமைத்துள்ளலை மாதவனுடன் சேர்ந்து ஆரம்ப இசையில் புல்லாங்குழலில் கொண்டு வந்தவரும் சாட்சாத் இவரேதான்.

 

இவர் புல்லாங்குழல்களை வாசிப்பதுடன் நிறுத்துவதில்லை. அவற்றை மென்மேலும் நவீனப்படுத்துவதிலும், புதுப் புது உத்திகளை அவற்றுள் புகுத்தி புல்லாங்குழல் இசையின் இன்னொரு பரிமாணத்தை வெளிக்கொணர்ந்துள்ளார். இவரின் தேடல்கள் மிகுந்த வெற்றியைக் கொடுத்துள்ளதைப் பற்றிய விளக்கம் இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. http://www.flutenaveen.com எனும் இணையத்துக்குப் போய் Technique என்பதைக் கிளிக் பண்ணிப் படியுங்கள், நவீனின் இன்னொரு பரிமாணம் அது.

 

இவரின் தனி நிகழ்ச்சிகள் ஐரோப்பா, அமெரிக்காவில் அனேக நாடுகளில் நடப்பதுண்டு. முதல்நாள் நெதர்லாந்தில் நடக்கும் நிகழ்ச்சி அடுத்த நாள் பாரிஸில் நடப்பதுண்டு. நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் போது 5 , 6 கிழமைகள் பயணித்தே கச்சேரி செய்து ரசிகர்களை மகிழ்விக்கிறார். 2010 இல் ; 'ஏ.ஆர். ரஹ்மான் இன் லண்டன'; நிகழ்ச்சியில்  The London Philharmonic Orchestra உடன் சேர்ந்து இவர் வாசித்தது கண்களுக்கும் காதுகளுக்கும் கிடைத்த பரிசு.

 

 

சில வருடங்களுக்கு முன் இவரின் குடும்பத்தவரின் பேட்டியொன்றப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. அதில் இவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு நிகழ்ச்சிகளுக்கு போய் வரும் போது, விதம் விதமான புல்லாங்குழல்களை வாங்கி வருவாரென்றும், அவற்றைத்தவிர வேறு ஒன்றுமே ஒருவருக்கும் வாங்கிவருவதில்லையென்றும் குடும்பத்தார் செல்லமாக கோபித்துக் கொண்டபோது ஒன்று மட்டும் விளங்கியது.

 

இந்த அற்புதக் கலைஞனுக்குத் தெரிந்தததும் விரும்புவதும் புல்லாங்குழல் ஒன்றே. பலரின் மனதை இலகுவாக்கி புத்துணர்ச்சியை, நாடுகடந்து, தேசம் கடந்து செய்யும் இவரின் இசைப்பயணம் தொடர வாழ்த்துவோம்.

 

 

மேலும் சில 'நான் ரசித்த பாடலும் இசையும்' கட்டுரைகள்:

 

* 'அடி ராக்கம்மா கையத்தட்டு' பாடல் தரும் புதுவித இசை அனுபவம்

 

* இசைஞானி : Counterpoint மூலம்  Count பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 2)

 

* இசைஞானி :  Counterpoint  மூலம்  Count   பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 1)

 

*  'இளைய நிலா பொழிகிறதே ....' பாடல் முழுவதும் பயணிக்கும் கிட்டாரை வாசித்தவர் யார் ?

 
* ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்....
 

* சுந்தரி கண்ணால் ஒரு சேதி.... பிரமிப்பு

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
S.kantharbuan2014-02-21 13:26:03
அருமையான கட்டுரை. அருமையான புல்லாங்குழல் இசைதந்த நவீன் குமாருக்கும் அவரை அறியத் தந்த கலைச்செல்வனுக்கும் நன்றிகள்
0
0
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.