Wednesday  25 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
'இளைய நிலா பொழிகிறதே ....' பாடல் முழுவதும் பயணிக்கும் கிட்டாரை வாசித்தவர் யார் ?
By General | 2014-01-03 18:03:06

-அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா-

 

நான் புலம் பெயர்ந்து பல வருடங்களாகிவிட்டன. இலங்கையென்றாலே நடந்து முடிந்த போரும் அவலங்களும்,  யுத்தங்களும், மரணங்களும்தான் எல்லோரின் நினைவுகளுக்கும் வருகின்றன.

 

ஆனால் ஒரு பாட்டை அதன் பின்னணியிசையை நான் எப்போது எங்கே கேட்டாலும் பளிச்சென்று ஒரு மின்வெட்டு. ஒரு உத்வேகம். ஒரு சந்தோஷக்கீற்று நெஞ்சமெல்லாம் நிறைந்து மறைகிறது. அந்தப் பாட்டு இலங்கையின் மறுபக்கத்தை, யுத்தமற்றிருந்த யாழ்ப்பாணத்தை அப்படியே ஒரு சுற்று சுற்றிக் காட்டுகிறது.

 

அந்தப்பாட்டு... ' இளைய நிலா பொழிகிறதே....'

 

வரலாற்று ஆசிரியர்களுக்கு போருக்கு முந்திய இலங்கையையும் போருக்குப் பிந்திய இலங்கையையும் வேறுபடுத்திக் காட்டுவதற்கு ஒரு ஆவணம் தேவைப்படுமாக இருந்தால் அவர்கள் நிச்சயமாக இளைய நிலா பொழிகிறதே வெளிவந்து பிரபலமான காலத்தை வைத்து வேறுபடுத்தலாம்.

 

அதாவது, இலங்கையின் நிலைமையை இளைய நிலா பொழிகிறதே என்ற பாடலுக்கு முன்னரான இலங்கை அந்தப்பாடலுக்குப் பின்னரான இலங்கை என இரண்டாகப் பிரிக்கலாம். நான் இப்படிக்கூறுவதற்குக் காரணம் இருக்கின்றது.

 

1982 – 1983 காலகட்டம்.- பெல்பொட்டம், தடிப்பான பெல்ட், அகண்ட காலர் ஷேர்ட், காதை மறைத்து நிற்கும் தலைமுடி, கமல்ஹாசனின் மீசை என இளைஞர்கள் திரிந்த காலம். அந்தக் காலத்தில் பயணங்கள் முடிவதில்லையில் வெளிவந்த இந்தப் பாட்டு தமிழ்த் திரைப் பாடல்களின் ட்ரெண்டிலும் இளசுகளிலும் ஏற்படுத்திய தாக்கம் கொஞ்ச நஞ்சமல்ல.

 

இந்தப் பாட்டில் கிட்டார் செய்த மாயஜாலத்தால் ஈர்க்கப்பட்டு யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்குகள்இ கிராமப்புறங்களில் இருந்தெல்லாம் இளைஞர்கள் பலர் கிட்டார் பழகப் முற்பட்டார்கள். ஆனால் அதைப்பற்றிய தெளிவும் அறிவும் இல்லாததாலும், நடைமுறைச் சிக்கலாலும் இடையிலேயே நின்றவர்கள்தான் அதிகம்.. அதன்பின்னான சிறிது காலத்தில் கொழும்பில் நடைபெற்ற இனக்கலவரமும் அதைத் தொடர்ந்த அரசியல் மாற்றங்களும் எல்லோரும் அறிந்ததே.

 

அந்த மாற்றம் எந்த இளைஞர்கள் கிட்டார் பழகவேண்டும் என்ற கலை உணர்வுடன் ஓடித்திரிந்தார்களோ அதே இளைஞர்கள் ஆயுதங்களுடன் அலையவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்கள்..

 

எங்கள் கல்லூரியின் உயர் தர வகுப்பில் படித்துக்கொண்டு சிரித்தும் கும்மாளமுமாக கிட்டார் பழகியே தீருவது என்ற உத்வேகத்துடன் தோளில் கிட்டாரை சுமந்தபடி சனி ஞாயிறுகளில் யாழ்ப்பாண நகரை நோக்கி கூட்டமாக சைக்கிலில் கலகலப்பாக செண்று கொண்டிருந்த இளைஞர்களை நாட்டில் ஏற்பட்ட விரும்பத்தகாத மாற்றம் அவர்கள் விரும்பிய கிட்டாருக்குப் பதிலாக ஆயுதங்களை ஏந்திக் கொண்டு திரிய வைத்தது.

 

முகமெல்லாம் சிரிப்புடனும் கலகலப்புடனும் முன்பு காணப்பட்டவர்கள் இப்போது தாடியுடனும், ஒழுங்காக வாராத தலை முடியுடனும், சீரியசான முகத்துடனும் காணப்பட்டார்கள்...  அதன்பின் இசையை நின்று நிதானித்து, ரசிப்பதற்கான நேரம் அங்கத்தைய இளைஞர்களுக்கு படிப்படியாக இல்லாமல் போயிற்று.

 

இதனால்தான் இலங்கையின் வசந்த காலத்தைக் குறிப்பதற்கு 'இளையநிலா பொழிகிறதே'யை எல்லையாகக் காட்டலாம் எனக் குறிப்பிட்டிருந்தேன்

 

ஒரு பாட்டிலே, அதன் மெட்டு, ஆர்கெஸ்ட்ரேஷன்,  பாடலின் வரிகள், பாடியவர், அதற்கு நடித்தவர் ... என எல்லாமே அட்டகாசமாக அமைவது வெகு கடினம். ஆனால் இந்தப்பாட்டில் மேற்கூறிய எல்லாவற்றுடனும் இன்னொருவரையும் சேர்த்தே ஆகவேண்டும் அவர்தான் இந்தப்பாட்டில்  Accoustic கிட்டார் வாசித்த கலைஞர்.

 

தமிழ் திரை இசையைப் புரட்டிப் போட்டு ஒரு 'ட்ரெண்டையே' உருவாக்கிய இசைஞானியின் அதி உச்ச இசைக்கற்பனையை நடைமுறைப்படுத்திய அந்தக் கலைஞர் யார் ?

 

இசைஞானி இளையராஜா,  ராசையாவாக சென்னை வந்த புதிதில் இசைக்குழுக்களில் இசைக்கலைஞராகப் பணிபுரிந்து மேடை நிகழ்ச்சிகளில் வாசித்துள்ளார். கிட்டாரும் அவர் வாசித்தவைகளில் அடங்குகின்றது. அதன்பின் ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராகச் சேர்ந்த போதும் அங்கே கிட்டாரிஸ்ட்டாக வாசித்துள்ளார். அதை விட இன்னொரு முக்கியமான விடயம் அவர் , Trinity College of Music, London  என்ற கலாசாலையில் கிட்டார் இசைப் புலமைக்காக தங்கப்பதக்கமும் பெற்றுள்ளார்.

 

இதை இங்கே நான் குறிப்பிடுவதற்குக்காரணம் இ80 களிற்குப் பிறகு இசைஞானியின் ஆளுமையின் கீழ் தமிழ்த்திரையிசை வந்தபின் தமிழ்த் திரையிசைப்பாடல்களில் கிட்டார் என்ற இசைக்கருவி லாவகமாக உபயோகிக்கப் பட்டிருப்பதற்கும் அந்த இசை அந்தப்பாடல்களில் மேலதிக ஒன்றாகக் காணப்படாமல் பாடலின் ஜீவனுடன் ஒன்றரக் கலந்திருந்ததற்குக் காரணம் என்னவென்பதை தெரியப்படுத்துவதற்குத்தான்.

 

கிட்டார் என்ற இசைக்கருவியில் அதீத நாட்டத்தையும் இயற்கையிலேயே அதி உச்சப் புலமையையும் பெற்றிருந்த இசைஞானி, தனது பாடல்களில் கிட்டாரை ஏனோதானோவென்று பாவிக்காமல் அதி அற்புதமாகப் பாவித்து வந்துள்ளார். அதற்காக அவர் தன்னுடன் கூட வைத்துக்கொண்ட கிட்டார் கலைஞர்கள் மிகச்சிறந்த விற்பன்னர்கள். நான் அறிந்தவரையில் அவர்கள் மொத்தம் எட்டு பேர்கள்.

 

அவர்கள் வருமாறு அவர்களைப்பற்றிய தகவலை எனக்களித்த நண்பர் வெங்கிக்கும், நெப்போலியன் செல்வராஜ் அவர்களுக்கும் நன்றிகள் .

 

சதாசுதர்சனம், சந்திரசேகர், ராதா விஜயன், காலம் சென்ற கிட்டார் கலைஞர் சாய்பாபா, கங்கை அமரன், சசி , டேவிட் ஜெயக்குமார், சந்தானம் ஆகியோரே அந்த கலைஞர்களாவர்..

 

நான் மேலே குறிப்பிட்டுள்ளவர்கள்தான் நாங்கள் கடந்த 30 வருடங்களாக கேட்டு ரசித்து, மெய்மறந்து, கிறங்கிய பாடல்களை இசைஞானி உருவாக்கத்துணை நின்றோர்.

 

இவர்களில்,  'இளைய நிலா பொழிகிறதே....' யில்,  பாடலின் தொடக்கம் இடையிசை முடிவு என அதற்கு ஜீவன்கொடுக்கும் கிட்டார் Accoustic Guitar.. அதை வாசித்தவர் சந்திரசேகர் ரங்கநாதன்என்ற மாபெரும் கலைஞன். இசைஞானியிடம் பலவருடங்களாக ட்ரம்மராகவும் பின் கொண்டக்டராகவும் பணியாற்றிய புருஷோத்தமனின் அண்ணன்.

 

சந்திரசேகர் ரங்கநாதன் யார் ? அவர் தனியே ஒரு கிட்டார் இசைக்கலைஞன் மட்டும்தானா ?? இல்லை நான் அறிந்தவரையில் அவர் ஒரு பன்முகத்திறமைசாலி .

 

இவர் ஒரு பொறியியலாளர். கீபோர்ட் கலைஞர், கிட்டாரிஸ்ட், ஒலிப்பதிவாளர், ஒலிப்பொறியியலாளராக (Sound Programmer) கடமையாற்றியுள்ளார்.

 

சமூக இணையத்தளங்களில் பாடல்கள் சம்பந்தமான மேலோட்டமான கட்டுரைகள் கருத்துக்கள எழுதுவோர், ..'இளைய நிலா பொழிகிறதே....' பற்றி எழுதும் போது அதில் கிட்டார் வாசித்தவரின் பெயரை தமது விருப்பத்துக்கு ஏற்ப தாம் நினைத்தப்படி எழுதுகிறார்கள்.

 

சமீபத்தில் ஒருவர் , 'இளைய நிலா பொழிகிறதே ...' என்ற பாடலுக்கு கிட்டார் வாசித்தவரின் பெயர் தோமஸ் என்றும், அவர் தற்போது அமெரிக்காவின் அட்லாண்டா எனும் நகரில் வசித்து வருவதாகவும் அவரிடம் தான் கிட்டார் பயில்வதாகவும் எழுதியிருந்ததைப் பார்த்தபோது பொறுக்க முடியவில்லை.

 

இதுவும் ஒருவகை மோசடிதான். இந்தப்பாட்டில் தனது புலமையை காட்டிய கலைஞனுக்கு கிடைக்கவேண்டிய கௌரவமும் மரியாதையும் கிடைத்தே தீரவேண்டும். அது அவருக்கான உரிமை.

 

எனது சிற்றறிவுக்கு புரிந்த வரையில், தமிழ் இசைக்குழுக்களின் மேடைகளிலும், பின்னணிப்பாடகர்கள் பங்குபற்றும் மேடைகளிலும் குறிப்பாக எஸ்.பி.பாலு. பங்குபற்றும் கச்சேரிகள், மேடைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அதிகளவில் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான தடவைகள் பாடப்பட்ட பாடலாக இந்தப்பாடல்தான் இருக்கும்.என நினைக்கிறேன்.

 

ஒரு 'ட்ரெண்டை' உருவாக்கிய பாடல். இன்றுவரை அலுக்காமல் புதியதாகவே இருக்கும் பாடல். பல சந்ததிகள் கடந்தும் இதில் சம்பந்தப்பட்ட அனைவரினதும் குறிப்பாக கிட்டாரிஸ்ட்டின் பேர் சொல்லப்போகிற பாடல் இது.

 

 

 

 

 

 

மேலும் சில 'நான் ரசித்த பாடலும் இசையும்' கட்டுரைகள்:

 

* இசைஞானி : Counterpoint மூலம் Count பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி

 

* ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்....

 

* சுந்தரி கண்ணால் ஒரு சேதி.... பிரமிப்பு !!!

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
குருராஜ் சிவப்பிரகாசம்2015-03-23 05:48:03
நான் மிகவும் ரசிக்கும் பாடல் மேலும் இந்த பதிவு மிகவும் அருமை. இந்த பாடலின் இடை இசையில் வரும் புல்லாங்குழல் இசையை வாசித்தவர் யார்?
0
0
Ignacio2014-10-03 17:15:53
Sharp thgkinni. Thanks for the answer.
0
0
nawas2014-01-05 23:55:08
இளையராஜா, எஸ்.பி.பி. சந்திரசேகர் ஆகியோருடன் கலக்குபவர் நம் கலைச்செல்வன்.
0
3
R.Ruthran2014-01-05 23:08:05
வயலின் வாசிக்கப் பழக விரும்பும் தமிழ் இளைஞர்கள் எல்லோருக்கும் இந்த பாடலுக்கு வாசிப்பதுதான் இலக்காக இருக்கும்.
0
2
Venki2014-01-05 20:02:07
கலைச்செல்வனிடம் இருந்து இன்னமும் வரும்.. நண்பர்களே
0
2
L.Mahendran2014-01-04 15:50:59
அருமையான ஆக்கம். நாம் அறியாத ஒரு மாபெரும் கலைஞரை அறிமுகப்படுத்தியுள்ளார் அ.கலைச்செல்வன். நன்றி.
0
3
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்2014-01-03 19:47:01
அருமையான பாடல்களைக் கொண்ட படம். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள இளைய நிலா பொழிகிறது என்ற பாடலில் வரும் வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும் முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும் வான வீதியில் மேக ஊர்வலம் காணும் போதிலே ஆறுதல் தரும் பருவ மகள் விழிகளிலே கனவு வரும் என்ற வரிகள் உவமானங்களின் உச்சமானவை.. பாடலைப் பாடும் அதேவேகத்தில் இசையும் தனது பயணத்தைத் தொடருவதுதான் இதன் சிறப்பு.. நண்பர் அ.கலைச்செல்வன் நல்ல பல விடயங்களைத் தந்து கொண்டிருக்கிறார். காலத்தால் அழியாத கீதங்களின் இசையமைப்பு நுட்பங்களைப் படித்துக் கொண்டே அந்தப் பாடல்களையும் முணுமுணுக்கச் செய்கிறார். வாழ்த்துகள் நண்பரே.
0
4
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.