Monday  23 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
'ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்...
By General | 2013-12-27 19:10:00

-ஃபீனிக்ஸ் பாலா

 

திரைவானில் 'எண்பதுகளின் காலம்'  சொர்க்கத்திற்கிணையானது. இசையில் இசைஞானியும், இயக்கத்தில் பாலச்சந்தரும், பாரதிராஜாவும்,  பாலுமகேந்திராவும், மகேந்திரனும்பாடல்களில் வாலியும், வைரமுத்துவும்  தனித்தனியாக கோலோச்சிக்கொண்டிருந்தஅந்த காலகட்டத்தில் இவையெல்லாவற்றையும் ஒருசேர அதேநேரத்தில் திறம்பட செய்துகாட்டியவர் நமது டி.ராஜேந்தர்.

 

இன்றைய தலைமுறையினரிடம் அல்லற்பட்டுக்கொண்டிருக்கும் இவரைப்பற்றி எவ்வளவோ எழுதலாம். எண்பதுகளில், இவருக்கென்று தனியான ரசிகர் பட்டாளங்களும் ரசிகையர் பட்டாளங்களும் இருந்தன.

 

தமிழ்திரைப்படவரலாற்றில் இவருடைய திரைப்படங்களின் தனித்துவத்தை எளிதாய் ஒதுக்கிவிடவியலாது.

 

 இவரது கைவண்ணத்திலுருவாகும் பாடல்களும், அப்பாடல்களின் தமிழ்வரிகளும் என்றைக்கும் திகட்டாதவை.

 

எண்பதுகளில் இருந்த நம்மவர்களின் ரசிப்புத்தன்மையை புரிந்துகொண்டு தன்னுடைய திரைப்படங்களில் எல்லா பணிகளையும் இழுத்துப்போட்டுப்பார்த்த இவர்,  பிற்கால ரசிகர்களின் ரசிப்புத்தன்மைக்கேற்றவாறு படங்களைத்தராததுதான் இவருக்கு பின்னடைவினை ஏற்படுத்திவிட்டது எனலாம்.

 

எனினும் தன்னுடைய கொள்கையில் விடாப்பிடியாய் என்பதற்காக இவரை பாராட்டலாம்.

 

படங்களில் கதாநாயகியை தொடாமல் நடித்த ஒரே நடிகர் இவர்தான் என்பதால் பெண்கள் மத்தியில் இவருக்கு செல்வாக்கு என்றுமுண்டு.

 

இவருடைய திரைப்படங்களில் இப்படி எவ்வளவோயிருந்தாலும் என்னை மிகவுங்கவர்ந்தது இவரது கவித்துவமான பாடல்வரிகள்தான்.

 

அவ்வகையில் எனது ஒரு தெரிவாக நான் எடுத்துக்கொண்டிருப்பது
'மைதிலி என்னை காதலி' திரைப்படத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியம்  பாடிய
'ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்..' பாடல்.

 

பெண்களை தொட்டுநடிக்காத இவர் பெண்களை வர்ணிக்கும் பாடல்களில் எப்படி அழகாகவும் மறைமுகமாகவும் வர்ணிக்கிறார் என்பது வியப்பானவொன்று.

 

சாண்டில்யன் கதைகளில் நாயகிகள் வர்ணிக்கப்படுவதைவிட இவருடைய பாடல்களில் வர்ணிக்கப்படுவது வடிவானது.

 

நவரசத்தையும் காட்டும் பரதநாட்டியத்தை கற்றுத்தேர்ந்த  காதலியை  அவளது காதலன் வர்ணித்துப்பாடுவதுபோலவும் அதற்கு அக்காதலியானவள் அபிநயம் பிடிப்பதுபோலவும் அமையப்பெற்ற பாடல்.

 

பல்லவியை கவனியுங்கள்:

 

ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்..
ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்..

 

சலங்கையிட்டாள் ஒரு மாது..
சங்கீதம் நீ பாடு..
சலங்கையிட்டாள் ஒரு மாது..
சங்கீதம் நீ பாடு...

 

அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதைக்காண்பதில் எந்தன் பரவசம்..

 

(ஒரு பொன் மானை...)


தத்தத்தகதிமி
தத்தத்தகதிமி
தத்தத்தகதிமிதோம்
தாதுத ஜந்தரி தா தததுத ஜந்தரி தை தாதுத ஜந்தரி தததுத
ஜந்தரி
தக்க தீங்கிணதோம் ததீங்கிணதோம் ததீங்கிணதோம் தா..


படத்தின் கதைப்படிஇநாயகியானவள் தனிமைப்படுத்தப்பட்டவளென்பதால்
அவளது தோழிகளுடன் பாடவேண்டிய பாடலான 'அம்மானை'யை காதலன் அவளுக்காக பாடுகிறான். அதுவும் எப்போது..? காதலியை 'நடனமாடும் பொன்மானாய்' உருவகப்படுத்தியபிறகு.

 

மாதவள் சலங்கையிட்டுக்கொள்கிறாள்.
இவரும் பாடத்தொடங்குகிறார்.

 

அவள் விழிகளில் ஒரு பழரசம்..
அதைக்காண்பதில் எந்தன் பரவசம்..

 

காதலியானவளின் விழிகள்,  காமந்ததும்பும் பார்வையை வீசுவதையும்  அதில் தன்னிலையை மறக்கச்செய்யும் பழரசபோதை இருப்பதையும்  அதைக்கண்டவுடன்
தான் பரவசமடைவதையும்  எத்தனை அழகாய் பாடுகிறார்..!


முதற்சரணத்தில்:

தடாகத்தில் மீன் ரெண்டு
காமத்தில் தடுமாறி
தாமரைப்பூ மீது விழுந்தனவோ..

இதைக்கண்ட வேகத்தில்
பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகந்தான் உன் கண்களோ..


பல்லவியில்,  காதலியின் விழிகளில் விழுந்தவர்  முதற்சரணத்திலும் அவற்றிலிருந்து எழவியலாமல் பாடுகிறார். நிச்சயமாய் இவ்வரிகளை ரசிக்காதவர் எவருமிருக்கவே முடியாது.

 

கண்களை,  மீன்களுடன் ஒப்பிட்டு  மீன்விழியாள்,  கயல்விழியாளென எவ்வளவோ உவமைகளைக்கேட்டிருந்தாலும்  இவ்வரிகள் நிச்சயமாய் வேறுபாடானவையே.

 

ஏனெனில்,  இவ்வரிகளில்  காதலியின் கண்கள் மட்டும் விளக்கப்படாமல் கூடவே அவளது முகவடிவையும் ஒருசேர வர்ணித்துள்ளார்.

 

குளத்துமீன்கள் இரண்டு  (நிச்சயமாய் கெண்டைமீன்கள்தான்)  காமத்தினால் தடுமாற்றங்கொண்டு  தாமரைமீது துள்ளிவிழுகின்றன. 

 

இப்படி வீழ்ந்துகிடப்பதை பிரம்மனவன் பார்க்கிறான். எப்படிப்பார்க்கிறானாம்..?  மோகங்கொண்டு பார்க்கிறான்.

 

தான் மோகத்துடன் ரசித்ததை இவளை படைக்கையில் காட்டுகிறானாம். அதாவது, அவளது முகத்தை தாமரைப்பூவாகவும்
அப்பூவில் துள்ளிவிழுந்த மீன்களாய் அவளது கண்களையும்
ஒருசேர வர்ணித்திருப்பது அழகோ அழகு.

 

அடுத்தவரிகள்:

 

காற்றில் அசைந்துவரும்
நந்தவனத்துக்கிருகால்கள்
முளைத்ததென்று
நடைபோட்டாள்..
.


காதலியவள் நடந்துவருமழகை எப்படி வர்ணிக்கிறார் பாருங்கள்.

 

நந்தவனத்தில் காற்றது நுழைந்தோடுவதைத்தானே நாம் கேள்விப்பட்டிருப்போம்..! அதை அப்படியே தலைகீழாய் மாற்றி
அவளை நந்தவனமாக்கி அவள் காற்றில் அன்னநடை போடுவதை அழகாய் நமக்குணர்த்தியுள்ளார்.

(இந்த இடத்தில் அமலாவின் நடையது கொள்ளையழகு)

 

நடையழகினை வர்ணித்த கவிஞர்  அடுத்ததாக அவளது நடனத்தை எப்படி வர்ணிக்கிறாரென்று பார்ப்போமா..?

 

ஜதி என்னும் மழையினிலே..
ரதி இவள் நனைந்திடவே..
அதில் பரதந்தான் துளிர்விட்டு
பூப்போல பூத்தாட
மனம் எங்கும் மணம் வீசுது  எந்தன்
மனம் எங்கும் மணம் வீசுது...

 

சலங்கையிட்டாள் ஒரு மாது..
சங்கீதம் நீ பாடு..


நாதிந்தின்னா நாதிந்தின்னா நாதிந்தின்னா நாதிந்தின்னா
தித்தா திகுதிகு தித்தா திகுதிகு தித்தா திகுதிகு தித்தா திகுதிகு
திகதானதானதா திகதானதானதா திகதானதான


அடடா..!  இவர் பாடும் ஜதிமழையினை கேட்கிறாள் அவள்.

 

காதலியவள் நடனமங்கையாதலால் அவளுள்ளிருக்கும் பரதமெனும் விதையானது துளிர்விடுகிறது.
துளிர்விட்டு அதன் மணத்தில் இவரது மனம் மூழ்குகிறது.
வானமழைதனில் நிலமவள் நனைந்து அவளுள்ளிருக்கும் விதையானது துளிர்விடுவதைப்போல..! காதலியினது நடனத்தை எத்துனையழகாய் வர்ணிக்கிறார்..!

 

இப்படியெல்லாம் வர்ணித்தால்
காதலிக்கு வெட்கம் வரவேண்டுமே..!

 

இதோ.... கடைச்சரணத்தில் வந்துவிட்டது வெட்கம்:

 

சந்தனக் கிண்ணத்தில்
குங்குமச்சங்கமம்
அரங்கேற அதுதானே உன் கன்னம்..

 

எத்துனை அழகான ஆடம்பரமில்லாத வரிகள்..!

 

காதலியினது கன்னத்து அழகினையும் அதன் நிறத்தையும்
சந்தனம் நிரம்பிய கிண்ணத்துடன் ஒப்பிடும் கவிஞர்
அவள் வெட்கங்கொள்ளும் நேரங்களில் கன்னமது சிவந்துபோவதை எப்படி வர்ணிக்கிறார் பாருங்களேன்..!

 

சந்தனமும் குங்குமும் கலந்துவிட்டால் உண்டாகும் புது வண்ணந்தான் அவளது கன்னமாம்..!

 

அடுத்த வரிகள்:

 

மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்...

 

வானவில்லின் நிறமது எப்படியிருக்கும்..?
ஏழு வண்ணங்களின் கலவைதானே..?
அப்படித்தான் இருக்கிறதா அவளது வண்ணமும்..?
இல்லையில்லை.

 

மேகத்தினூடே மறைந்துநின்று எட்டிப்பார்க்கும் வானவில்லை பார்க்கும்போது  நம்முள் எழும் வியப்புணர்வினை அவளை காண்கையில் எழும் உணர்வுடன் மறைமுகமாய் ஒப்பிடுகிறார் கவிஞர்.

 

மேற்சொன்னவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாய் அமைந்திருக்கின்றன அடுத்த வரிகள்.

 

இடையின் பின்னழகில்
இரண்டு குடத்தைக்கொண்ட
புதிய தம்புராவை மீட்டிச்சென்றாள்..


இதை விளக்காமலே எளிதிற்விளங்கிக்கொள்ளலாம்.
பெண்ணின் பின்னழகை மத்தளத்துடன் ஒப்பட்டுத்தான் எழுதுவார்கள்.

 

ஆனால் இக்கவிஞரைப்பாருங்கள்.தம்புராவை கையிலெடுத்துள்ளார். தம்புராவிற்கு ஒரு குடந்தானே..!
அதனால்தான் இரண்டு குடத்தைக்கொண்ட 'புதிய' தம்புராவாக வர்ணித்த கவிஞர் அப்பின்னழகின் வனப்பை தம்புராவின் மீட்டலுடன் ஒப்பிட்டிருப்பதைக்காண்கையில் அவர் சகலகலாவல்லவரென்பது தெள்ளென விளங்குகிறது.

 

கடைவரிகள்:

 

கலைநிலாமேனியிலே
சுளைபலா சுவையைக்கண்டேன்..
அந்தக் கட்டுடல் மொட்டுடல்
உதிராமல் சதிராடி
மதிதன்னில் கவி சேர்க்குது எந்தன்
மதிதன்னில் கவி சேர்க்குது...


(சலங்கையிட்டாள் ஒரு மாது...)


நிலாபோன்ற களையான மேனியைக்கொண்ட காதலியவளின் அழகினை பார்வையாலேயே பருகிப்பார்த்து அதன் சுவையினை பலாச்சுசளையின் சுவையுடன் ஒப்பிட்டவர்,  அவளது கட்டுடலையும் அக்கட்டுடலில் மலராத  மொட்டெனவிருக்கும்  அவயமானது உதிராமல் நின்று சதிராட்டம் ஆடுவதை
எவ்வளவு நயமாகச்சொல்லியுள்ளார்..!
அடடா..!


காதலியை வர்ணிப்பதற்கு இவரது பாடல்களைக்கேட்டாலே போதும்போல.

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
k.varadharajan2016-05-09 10:39:23
அருமை பாலா.ஆழமான விளக்கம்.ரசனை மிக்க வார்த்தை பயன்பாடு.அருமை அருமை.
0
0
Narkis Banu2013-12-30 12:23:49
அருமை வாழ்த்துகள் பாலா..
0
1
L.mahendran2013-12-29 21:14:12
உயர்தரமான பாடல் அதற்கேற்ற உயர்தரமான ரசனையுடனான விமர்சனம். அருமை.
1
1
ஃபீனிக்ஸ் பாலா2013-12-29 10:25:50
மிக்க நன்றி சகோதரர்களே.
0
2
j.Mirun2013-12-29 10:01:34
மிகத் திறமையான கலைஞர் டி.ராஜேந்தர். அவரின் கவித்துவத்துக்கு ஆற்றலுக்கு மிகச் சிறந்த சான்றுகளில் ஒன்று ஒரு பொன் மானை நான் காண பாடல். இலக்கியத்தரமான அந்த பாடலை ஃபீனிக்ஸ் பாலா ரசித்து விளக்கியுள்ள விதம் அபாரம்.
0
2
Selvaraj Saravanan2013-12-29 07:48:31
வணக்கம் நண்பர் பாலா அவர்களே, ஒரு பொன்மானே நான் காண என்ற படலை ஒவ்வொரு எழுத்தையும் அதன் ஆழத்தையும் அர்த்தத்தையும் மிக அழகாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள் அழகு சொல்ல வார்த்தை இல்லை நண்பரே. தங்கள் விளக்கத்தையும் கருத்தையும் படித்தபின் இந்த பாடல்மீது மிகுத்த மரியாதை வருகிறது. வாழ்த்துக்கள் பாலா.
0
1
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.