Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
359 பேரை பாதுகாப்பதில் தனது உயிரைத் தியாகம் செய்த விமான ஊழியர் நீர்ஜா பெனோட்
2016-02-19 18:13:26

(சத்ருகன்)

 

சோனம் கபூர் கதாநாயகியாக நடித்த நீர்ஜா (Neerja) எனும் பொலிவூட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.


19 பேர் கொல்லப்பட்ட பயங்கர விமானக் கடத்தல் முயற்சியொன்றில் 359 பேரை பாதுகாப்பதில் தனது உயிரை தியாகம் செய்த விமான ஊழியர்தான் நீர்ஜா பெனோட்.


அந்த கடத்தல் சம்பவம் குறித்த கட்டுரை இது.


1986 செப்டெம்பர் 5 ஆம் திகதி பாகிஸ்தானில் ஒரு கோரமான விமானக் கடத்தல் முயற்சி இடம்பெற்றது.


து அமெரிக்காவின் பான் அமெரிக்கன் வேர்ல்ட் எயார்வேஸ் (பான் எம்) நிறுவனத்தின் விமானம். பான் எம். 73 என அவ் விமானத்துக்கு இலக்கமிடப்பட்டிருந்தது.  


1986.09.05 ஆம் திகதி இந்தியாவின் மும்பை நகரிலிருந்து அவ் விமானம் புறப்பட்டது. பாகிஸ்தானின் கராச்சி, மேற்கு ஜேர்மனியின் பிராங்போர்ட் விமான நிலையங்களில் தரித்து நின்றபின், நியூயோர்க் ஜோன் எவ்.கென்னடி விமான நிலையத்தை அடைவது தான் அவ் விமானப் பயணத்தின் இலக்கு.


மும்பையிலிருந்து கராச்சி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த அந்த விமானத்தில் சில பயணிகள் இறங்கிக்கொள்ள, வேறு பல பயணிகள் அதில் ஏறிக்கொண்டனர். அதையடுத்து மேற்கு ஜேர்மனியின் பிராங்போர்ட் நோக்கி புறப்படுவதற்கு அவ் விமானம் தயாரானது.


கராச்சியில் அப்போது காலை சுமார் 6.00 மணியிருக்கும். விமான நிலைய ஊழியர்கள் பயன்படுத்தும் வேனைப் போன்ற ஒரு வாகனம் விமான நிலைய சோதனைச் சாவடியைக் கடந்து, அவ் விமானத்தை நோக்கி வேமாக வந்தது. கராச்சி விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களைப் போன்ற சீருடை அணிந்த சிலர் அவ் வேனில் இருந்தனர். அதனால் விமானத்துக்கு அருகிலிருந்த ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தெரியவில்லை.


ஆனால், வேகமாக வந்த அவ் வேன், விமானத்தின் படிக்கட்டை மோதித் தள்ளியது. வேனிலிருந்த சிலர், விமானத்துக்குள் நுழைந்தனர்.

 

அவர்களிடம் துப்பாக்கிகள், கிரனேற்றுகள் போன்றவை காணப்பட்டன. அவர்கள் தம்வசமிருந்த துப்பாக்கியொன்றால் வேட்டுக்களை தீர்த்து விமானத்தின் பயணிகள் பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.


அப்போதுதான் விமான நிலைய ஊழியர்கள் பயன்படுத்தும் வேன் போன்று உருமாற்றப்பட்ட வாகனம் அது என்பதும் அதில் பயணித்தவர்கள் விமான நிலைய ஊழியர்கள் அல்லர் என்பதும் ஏனையோருக்குப் புரிந்தது.

 

பான் எம். 73 விமானம் ஒரு போயிங் 747 - 121 ரகத்திலான பெரிய  விமானம். 361 பயணிகள் 19 ஊழியர்களென 380 பேர் இருந்த அவ் விமானத்துக்குள் பதற்றம் பரவத் தொடங்கியது.

 


விமான ஊழியர்களில் சிலர் விமானத்துக்குள் இருந்த தொலைபேசி ஊடாக விமானிகள் அறையை (கொக்பிட்) தொடர்புகொண்டு விமானிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து விமானிகள் அறையின் மேற்பகுதியிலிருந்த கதவுக்கூடாக விமானிகள் இருவரும் தப்பிச் சென்றனர்.

 

கடத்தல் குழுவின் பிரதான நபரான ஸயீத் சபாரினி சிறிதுநேரத்தில் இதை உணர்ந்தார். அதனால், விமானத்தை கடத்திக்கொண்டு பறக்கும் கடத்தல்கார்களின் நோக்கத்தை நிறைவேற்ற முடியவில்லை. அவர்கள் அதிகாரிகளுடன் பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.


விமானத்தின் முன் பகுதியிலிருந்த வர்த்தக வகுப்பு பயணிகளை விமானத்தின் பகுதிக்கு செல்லுமாறு உத்தரவிட்ட கடத்தல் குழுவினர், பின்பகுதியிலுள்ள பயணிகளை முன்பகுதிக்கு செல்லுமாறும் உத்தரவிட்டனர்.


ஏற்கெனவே ஆசனங்கள் ஏறத்தாழ நிறைந்திருந்த அவ் விமானத்தில் இம் மாற்றத்தின்போது, பயணிகள் பலர் கதவுகளுக்கு அருகிலும் ஆசனங்களுக்கு இடையிலான பகுதிகளிலும் கீழே அமர்ந்துகொண்டனர்.


காலை 10 மணியளவில், விமானத்திற்குள் அங்குமிங்கும் நடந்து எதையோ தேடிய ஸயீத் சபாரினி, இறுதியாக ராஜேஸ்குமார் எனும் இளைஞரின் ஆசனத்துக்கு அருகில் வந்து நின்றார்.

 

29 வயதான ராஜேஸ்குமார், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர். அவர் அமெரிக்கப் பிரஜையாகி சிறிது காலமே ஆகியிருந்தது.

 


ராஜேஸ்குமாரை விமானத்தின் முன்புறக் கதவுக்கு அருகில் சென்று கதவைப் பார்த்தவாறு முழந்தாளிட்டு அமருமாறு உத்தரவிடப்பட்டது.

 

கைகளை தலையின் பின்புறம் வைத்துக்கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவுகளின்படி ராஜேஸ்குமார் செயற்பட்டார்.


அதன்பின் அதிகாரிகளுடன் கடத்தல் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கினர். பான் எம் நிறுவனத்தின் பாகிஸ்தான் பிரிவு தலைமை அதிகாரி விராவ் டரோகாவை தொடர்புகொண்ட ஸயீத் சபாரினி, 15 நிமிடங்களுக்குள் விமானிகள் திரும்பி வரவில்லையென்றால் ராஜேஸ்குமார் சுடப்படுவார் என அச்சுறுத்தினார்.

 

விமானத்தைச் சூழ பாகிஸ்தான் படையினர் இருந்தபோதிலும் பயணிகள், ஊழியர்களின் பாதுகாப்பு கருதி அவர்களால் எதுவும் செய்யமுடியவில்லை.


15 நிமிடங்களாகியும் விமானிகள் திரும்பி வரவில்லை. அதனால் சபாரினி ஆத்திரமடைந்தார். ராஜேஸ்குமாரின் தலையை நோக்கி அவர் துப்பாக்கியால் சுட்டார். விமானத்தின் முன்புறப் பகுதியிலிருந்த பயணிகள் பார்த்துக்கொண்டிருந்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றது.


அதன்பின் விமானத்தின் கதவைத் திறந்து ராஜேஸ்குமாரின் உடலை வெளியே தள்ளிவிட்டார் சபாரினி. விமானத்தின் வெளியிலிருந்த பாகிஸ்தான் படையினர் ராஜேஸ்குமாரை உடலை அம்பியூலன்ஸ் ஒன்றில் ஏற்றினர்.

 

விமானத்திலிருந்து தள்ளப்பட்ட வேளையிலும் அவர் சுவாசித்கொண்டிருந்தததாகவும் ஆனால் கராச்சி வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் அவர் இறந்துவிட்டதாகவும் பின்னர் தெரிவிக்கப்பட்டது.

 

கடத்தல் குழுவின் ஏனைய அங்கத்தவர்களுடன் இணைந்துகொண்ட ஸயீத் சப்ரானி, அனைத்து பயணிகளினதும் கடவுச்சீட்டுகளை சேகரிக்குமாறு விமான ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

 

வேறு வழியின்றி அந்த உத்தரவுக்கு ஊழியர்கள் கீழ்படிந்தனர். விமான ஊழியர்களில் ஒருவரான நீரஜா பெனோட்டுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது.

 

கடவுச்சீட்டுகளின் மூலம் அமெரிக்கர்கள் இனங்காணப்பட்டு அவர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கப்படலாம் என 23 வயதான நீரஜா பெனோட் கருதினார்.

 

அதனால் தனது உயிரையும் பொருட்படுத்தாமல், அமெரிக்கர்களின் கடவுச்சீட்டுகள் சிலவற்றை ஆசனங்களுக்கு அடியிலும் குப்பைக் கூடையொன்றிலும் மறைத்துவைத்தார்.


கடவுச்சீட்டுகள் சேகரித்து முடிக்கப்பட்ட சிறிது நேரத்தில் மைக்கல் ஜோன் தெக்ஸ்டன் எனும் பிரித்தானிய பிரஜையை முன்பகுதிக்கு வருமாறு விமான ஊழியர்கள் அழைத்தனர். அவர் அங்கு சென்றபோது ஸயீத் சப்ரானியின் கையில் தனது கடவுச்சீட்டு இருப்பதை அவதானித்தார்.


மைக்கல் ஜோன் தெக்ஸ்டனிடம் அவர் ஒரு இராணுவ வீரரா, துப்பாக்கி உள்ளதா என சப்ரானி கேட்டார். இல்லை என தெக்ஸ்டன் பதிலளித்தார்.

 

மைக்கல் ஜோன் தெக்ஸ்டனிடம் அவர் ஒரு இராணுவ வீரரா, துப்பாக்கி உள்ளதா எனவும் சப்ரானி விசாரித்து விட்டு இல்லை என பதில் வந்தபின், விமானத்தின் முன்புறக்கதவை பார்த்தவாறு முழந்தாளிட்டு அமருமாறு அவருக்கு சப்ரானியால் உத்தரவிடப்பட்டது.


வெளியிலிருந்து எவரேனும் விமானத்தை நெருங்க முயன்றால்  மற்றொரு பயணி கொல்லப்படுவார் என அதிகாரிகளை சப்ரானி அச்சுறுத்தினார்.


அதேவேளை சப்ரானியை பான் எம் நிறுவனத்தின் பாகிஸ்தான் செயற்பாட்டுப்பிரிவு தலைமை அதிகாரியான விராப் தரோகா தொடர்புகொண்டார்.

 

விமானத்தின் கொக்பிட் அறையிலுள்ள ரேடியோ தொலைத்தொடர்பு கருவியை  இயக்கக்கூடிய விமான ஊழியர் ஒருவர் விமானத்தில் இருப்பதாகவும் தெரிவித்ததுடன்  ரேடியோ கருவி மூலம் பேச்சுவார்த்தை நடத்துமாறும் சப்ரானியிடம் விராப் தரோகா கூறினார்.

 

பின்னர் சப்ரானியின் போக்கில் சற்று மாற்றம் தென்பட்டது. அவர் மைக்கல் ஜோன் தெக்ஸ்டனிடம் சென்று தண்ணீர் வேண்டுமா எனக் கேட்டார். 'ஆம்' என தெக்ஸ்டன் பதிலளித்தார். தெக்ஸ்டனுக்கு திருமணமாகிவிட்டதா எனவும் சப்ரானி விசாரித்தார்.


தான் வன்முறைகளை விரும்பவில்லை எனவும் ஆனால் அமெரிக்கர்களும் இஸ்ரேலியர்களும் தனது நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதால் முறையாக வாழ முடியவில்லை எனவும் சப்ரானி கூறினார். பின்னர் ஆசனமொன்றில் அமருமாறு தெக்ஸ்டனுக்கு கடத்தல் குழுவைச் சேர்ந்த மற்றொருவர் உத்தரவிட்டார்.


ஆனால், காலை 6 மணிக்கு ஆரம்பித்த விமானக் கடத்தல் விவகாரம் முடிவடையும் அறிகுறி எதுவும் தென்படவில்லை. தம்மில் ஒருவர் கொல்லப்பட்டுவிட்ட நிலையில் அடுத்து என்ன நடக்குமோ என்ற பீதியில் 360 பயணிகளும் 19 ஊழியர்களும் தவித்தனர்.


சிறிது நேரத்தின்பின் திருப்புமுனையான ஒரு சம்பவம் இடம்பெற்றது. விமானத்தின் 3 ஆம் இலக்க கதவுக்கு அருகில் அமர்ந்திருந்த பயணியொருவர், அவ் விமானம் தொடர்பான கையேடு ஒன்றை கண்டெடுத்தார்.

 

விமான ஊழியர்கள் அறிந்துகொள்ள வேண்டிய சகல விபரங்களும் அக் கையேட்டில் இருந்தன. விமானத்தின் கதவை திறப்பது எப்படி, அவசர நிலைமைகளில் பயணிகள் வெளியேறுவதற்கான சறுக்கல் சாதனத்தை இறக்குவது எப்படி என்பன போன்ற விபரங்களும் அதில் அடங்கியிருந்தன.


அக் கையேடு 3 ஆம் இலக்க கதவுக்கு அருகில் இருந்த பயணிகளின் கைகளுக்கு மாறிக்கொண்டிருந்தது.. இதனால், கதவை திறப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களால் அறிந்துகொள்ள முடிந்தது.


இரவு 9.00 மணிளவில் விமானத்திற்குள் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால்  விளக்குகள் அணைந்துகொள்ள அவசரகால விளக்குள் மாத்திரம் ஒளிரத் தொடங்கின.


அதையடுத்து விமானத்தின் முன்புறமிருந்த பயணிகளை பின்புறத்திற்கு செல்லுமாறும் பின்புறத்திலிருந்தவர்களை முன் புறத்துக்கு செல்லுமாறும், கடத்தல் குழுவினர் உத்தரவிட்டனர்.

 

ஆசன வரிசைகளுக்கு இடைப்பட்ட பகுதி பயணிகளால் நிறைந்திருந்தால் நின்றுகொண்டிருந்த பயணிகள் ஆசனத்தில் அமர்ந்துகொண்டனர்.


இருள்மிகுந்த அச் சூழலில் கடத்தல் குழுவைச் சேர்ந்த ஒருவர் கிரனேற் ஒன்றை வீசினார். அதையடுத்து கடத்தல் குழுவின் ஏனைய அங்கத்தவர்கள் பயணிகளை நோக்கி தமது இஷ்டம் போல் சுடத் தொடங்கினர்.

 

பயணிகள் அலறினர். 3 ஆம் இலக்க கதவுக்கு அருகில் இருந்த பயணிகள் இனி பொறுக்க முடியாது எனக் கருதி கதவை திறந்தனர். அதையடுத்து பயணிகள் வெளியேற ஆரம்பித்தனர்.


விமானப் பணிப்பெண்ணான நீர்ஜா பெனோட் சறுக்கல் சாதனமொன்றை விரித்து பல பயணிகள் தப்புவதற்கு உதவினார். ஆத்திரமடைந்த கடத்தல் குழுவினர் துப்பாக்கிப் பிரயோகங்களை அதிகரித்தனர்.

 

3 சிறார்கள் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்வதை தடுப்பதற்காக தனது உடலால் நீர்ஜா பெனோட் மறைத்துக் கொண்டிருந்தாகவும் அவரின் உடலை துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தால் அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.


இதனிடையே பாகிஸ்தான் அரசாங்கம் தனது இராணுவத்தின் எஸ்.எஸ்.ஜி. எனும் விசேட சேவைகள் பிரிவை உடனடியாக அனுப்பியது. அத்துடன் ரேஞ்சர்ஸ் எனும் கொமாண்டோ படையினரையும் தயார் நிலையில் வைத்தது.


கடத்தல் குழுவினர் விமானத்துக்குள் பயணிகள் மீது கண்டபடி துப்பாக்கிப் பிரயோகம் செய்துகொண்டிருக்க பாகிஸ்தான் இராணுவ படையினர் பதிலுக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.

 

ஜெனரல் டி.எம். டைகர் தலைமையிலான பாகிஸ்தான் இராணுவ சிறப்பு செயற்பாட்டுப் படைப்பிரிவு இந் நடவடிக்கைக்க தலைமை தாங்கியது.  


இந்த சமருக்கு மத்தியில் பயணிகள் தப்பிச்சென்றுகொண்டிருந்தனர். இவர்களில் மைக்கல் ஜோன் தெக்ஸ்டனும் ஒருவர். ஆனால் சுமார் 20 பேர் உயிரிழந்தனர். சுமார் 150 பேர் காயமடைந்தனர்.


இவ் விமானத்தில் இருந்த 19 ஊழியர்களில் 8 பேர் இந்தியாவையும் நால்வர் பிரிட்டனையும் ஒருவர் பிரான்ஸையும்  தலா மூவர் அமெரிக்கா மற்றும் ஜேர்மனியையும் சேர்ந்தவர்கள். 


361 பயணிகளில் 91 இந்தியர்கள். 81 ஜேர்மனியர்கள், 44 பாகிஸ்தானியர்கள், 41 அமெரிக்கர்கள், 30 கனேடியர்கள் 21 இத்தாலியர்கள் ஆகியோரும் அடங்கியிருந்தனர்.


13 இந்தியர்கள், 3 பாகிஸ்தானியர்கள், அமெரிக்கா, மெக்ஸிகோவைச் சேர்ந்த இருவர் உட்பட 20 பேர்  கொல்லப்பட்டனர்.


கடத்தல் குழுவினர் தப்பிச் செல்ல முயற்சித்தபோது விமான நிலையத்தில் வைத்து அக் குழுவின் ஐந்து உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர். 1988 ஜூலை 6 ஆம் திகதி பாகிஸ்தான் நீதிமன்றமொன்று அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது.

 

 

பின்னர் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி இத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
2001 செப்டெம்பர் மாதம் சிறையிலிருந்து சப்ரானி விடுவிக்கப்பட்டார்.

 

ஆனால் அதே மாத இறுதியில் தாய்லாந்தின் பேங்கொக் நகரில் வைத்து, அமெரிக்காவின் எவ்.பி.ஐ. புலனாய்வு அமைப்பினால் அவர் கைது செய்யப்பட்டார்.

 

அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்ட சப்ராணிக்கு அமரிக்க நீதிமன்றமென்று 160 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.


விமானக் கடத்தல் குழுவின் ஏனைய நான்கு உறுப்பினர்களும் 2008 ஜனவரியில் பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

 

இந்த விமானக் கடத்தலுக்கு லிபிய அரசாங்கம் அனுசரணை வழங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. கேணல் முவம்மர் கடாகி லிபிய அரசிடம் நஷ்ட ஈடுகோரி  வழக்குத் தொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பொன்று தெரிவித்தது.


இதேவேளை, செப்டெம்பர் 7 ஆம் திகதி தனது 23 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக கொல்லப்பட்ட விமான ஊழியர் நீர்ஜா பெனோட்டுக்கு இந்திய அரசு, தீரச்செயல்களுக்காக பொதுமக்களுக்கு வழங்கப்படும் தனது உயர் விருதான அசோக சக்கர விருது வழங்கி கௌரவித்தது. இவ் விருதை வென்ற மிக இளம் நபர் நீர்ஜா பெனோட் ஆவார்.


அதேவேளை, நீர்ஜாவின் குடும்பத்தினர் காப்புறுதிப் பணம் பான் அமெரிக்கன் எயார்வேஸ் நிறுவனத்துடன் நிதியுதவி மூலம் நீர்ஜா பெனோட் பான் எம் நிதியம் (Neerja Bhanot Pan Am Trust) எனும் அறக்கட்டளையொன்றை ஆரம்பித்தனர்.


உலகெங்கும் நெருக்கடியான சூழலில் சிறந்த சேவையான்றி விமான ஊழியர்களில் ஒருவருக்கும் சீதனப் பிரசினைகளுக்கு முகம்கொடுத்து, பின்னர் அதிலிருந்து துணிவுடன் மீண்டு இத்தகைய நிலைக்குள்ளான ஏனைய பெண்களுக்கும் உதவும்  இந்திய பெண்ணொருவருக்குமாக தலா 150,000 இந்திய ரூபா பெறுமதியான இரு விருதுகளை வருடாந்தம் மேற்படி அறக்கட்டளை வழங்குகிறது.

 

(மெட்ரோ நியூஸ் 05, 12 செப்டெம்பர் 2014 இதழ்களில் இருந்து)

 

தொடர்புடைய கட்டுரைகள்:

 

* நியூஸிலாந்தில் விமா­னி­களை கத்­தி­களால் தாக்கி  விமா­னத்தை கடத்த முயன்ற சோமா­லிய பெண்  -2

 

* நியூஸிலாந்தில் விமா­னி­களை கத்­தி­களால் தாக்கி
விமா­னத்தை கடத்த முயன்ற சோமா­லிய பெண் 1

 

*10,000 அடி உயரத்தில் பறந்த விமானத்திலிருந்து கப்பப் பணத்துடன் குதித்த கடத்தல்காரன் (3)

 

*10,000 அடி உயரத்தில் பறந்த விமானத்திலிருந்து கப்பப் பணத்துடன் குதித்த கடத்தல்காரன் (2)

 

*10,000 அடி உயரத்தில் பறந்த விமானத்திலிருந்து கப்பப் பணத்துடன் குதித்த கடத்தல்காரன்(1)

 

* 100 பேரின் மரணத்துக்கு வழிவகுத்த மலேஷிய எம்.எச். 653 விமானக் கடத்தல் (6)

 

* நடுவானில்  நிகழ்ந்த பயங்கரங்கள்; உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் (5)

 

* நடுவானில்  நிகழ்ந்த பயங்கரங்கள்; உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் (4)

 

*  நடுவானில் நிகழ்ந்த பயங்கரங்கள்;  உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் - ( 3)

 

* நடுவானில் நிகழ்ந்த பயங்கரங்கள்: உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் (2)

 

* நடுவானில் நிகழ்ந்த பயங்கரங்கள்: உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் (1)

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.