Monday  23 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
அநுராதபுரத்திலிருந்து வத்தளைக்கு புறாக்களின் மூலம் தூது அனுப்பியது எவ்வாறு? - புறா வளர்ப்பாளர் மோகான் டீ லெனரோல் விபரிக்கிறார்
2016-01-25 15:57:20

“சிலாபம் திண்ணனூரான்”

 

ஒருவருக்குத் தன் கருத்தையோ உணர்வையோ தெரியப்படுத்த மற்றொருவரைத் தம் பிரதிநிதியாக அனுப்புதல் தூது எனப்படும். இது அகத்தூது, புறத்தூது என இருவகைப்படும். தமிழில் தூது என்ற சிற்றிலக்கியம் கூட உள்ளது. சீவகசிந்தாமணியில் கிளியும் பெருங் கதையில் மாறும்.

 

நள வெண்பாவில் அன்னமும் இராமாயணத்தில் அனுமனும் பாரதத்தில் கண்ணனும் தூதுவர்களாக படைக்கப்பட்டிருப்பதை அறியலாம். ஆதிகாலத்தில் மன்னர்கள் முதல் சாதாரண மக்கள் வரை அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக புறா அன்னம், மயில், கிளி, குயில், வண்டு ஆகியவைகளை தூது அனுப்புவதற்காக பயன்படுத்தியதனை பழைய வரலாற்று, இதிகாச நூல்கள் தெரிவிக்கின்றன. 

 

 

பறவைவைகளின் மூலம் தூது அனுப்பும் முறைமையை விஞ்ஞானம் வளர்த்து விட்ட இன்றைய காலத்தில் நிரூபித்துக் காட்டியுள்ளார் வத்தளையைச் சேர்ந்த பிரபல தேயிலை ஏற்றுமதி வர்த்தகர் மோகான் டீ லெனரோல். 

 

72 வயதான லெனரோலின் இம் முயற்சி இன்றைய இளம் சமூகத்திற்கு பெரும் பாடமாகும். இவரிடம் இம் முயற்சி பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள சென்றபோது, லெனரோல் அன்போடு தமிழில் வணக்கம் சொல்லி எம்மை வரவேற்றார்.

 

தமிழில் பேச இயலாது எனக் கூறிய அவர், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் பேச்சை  அவரே ஆரம்பித்தார். 

 

“எனது  12 வயதில் புறாக்களை வளர்க்க ஆரம்பித்தேன். எனக்கு அக் காலத்தில் புறாக்களுடனான வாழ்வு பெரும் பொழுதுபோக்காக இருந்தது. புறா வளர்க்கும் கலையை தெரிந்து அதற்குள் நுழைந்து வாழ்ந்தேன்.

 

அதன் தாக்கம் என்னை புறாக்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட வைத்தது. இது தொடர்பாக பல வெளிநாட்டு நூல்களை வாசித்து தெளிவு பெற்றேன்.

 

புறா இனத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வகைகள் இருப்பதை தெரிந்து கொண்டேன்.

 

மனிதர்களில் சோம்பேறிகளும் திறனற்றவர்களும் இருப்பதைப் போன்றே புறாக்களிலும் சோம்பேறிகளும் விரைவாக வானத்தில் பறக்க இயலாத வகைகளும் உள்ளன. 

 

நாம் வீட்டில் வளர்க்கும் கோழிகளை விட பெரியளவான புறாக்களும் உள்ளன.

 

இப் புறாக்களை வளர்ப்பது மிக கஷ்டமான விடயம். இவ்வாறான இனத்தைச் சேர்ந்த புறாக்களை அயலவர்களுக்கு கொடுத்துவிட்டேன்.

 

எனது திருமணத்தின் பின்னர் குடும்பம், வர்த்தகம் என குடும்ப பொறுப்புக்கள் அதிகரிக்க புறா வளர்ப்பு துறைக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்” என்றார் லெனரோல்.

 

“மீண்டும் எப்போது தங்களின் புறா வளர்ப்பு பொழுதுபோக்கை ஆரம்பித்தீர்கள்?” எனக் கேட்டோம்.

 

“ 2004 இல் மீளவும் புறா வளர்ப்புக்குள் கால் வைத்தேன். முன்பைவிட இப்போது புறா வளர்ப்புத் தொழில்நுட்பம், புறாக்களுக்கான உணவு வகைகள், தூர பறக்கும் வகையில் பயற்சிகள் போன்றவற்றை வெளிநாடுகளைச் சேர்ந்த புறா வளர்ப்பாளர்கள் மூலமாக அறிந்து கொண்டேன். 

 

காலையில் 7 மணிக்கு புறாக்களை வானத்தில் பறக்க விட்டு இரவு 8 மணிக்கு எனது வீட்டிலுள்ள தமது கூடுகளுக்கு வரும் வகையில் அவற்றுக்குப் பயிற்சி கொடுத்தேன்.

 

இதற்காக இரவில் வானத்தை நோக்கியவாறு பெரும் ஒளியை வழங்கும் மின் விளக்குகளை பொருத்தினேன். 

 

சில புறாக்கள் மின் ஒளியை பார்த்து அதன் இருப்பிடங்களை அடையாளம் கண்டு கொள்ளும். இவ் வகையான புறாக்கள் Racing Homes புறா இனத்தைச் சேர்ந்தவையாகும்.

 

இந்த இனத்து புறாக்கள் சுவிட்ஸர்லாந்து, மலேஷியா, ஜேர்மனி போன்ற நாடுகளிலேயே வாழ்கின்றன. வெளிநாட்டிலிருந்து என்னால் பெறப்பட்ட புறாக்களில் இருந்தும் இலங்கையின் புறாக்களுடன் இணைந்து பெறப்பட்ட கலவை புறாக்களே இன்று என்னிடம் உள்ளன.

 

சிலவற்றை நான் வைத்துக் கொண்டு ஏனையவற்றை விற்று விடுவேன். இவ் வகை புறாக்கள் முட்டையிட்டவுடன், புறா குஞ்சுகளை கேட்டு ஓடர் தருபவர்களும் உள்ளனர்” என லெனரோல் பதிலளித்தார்.

 

புறாவின் மூலம் செய்தி அனுப்பும் எண்ணம் எவ்வாறு தங்களுக்குள் தோன்றியது என அவரிடம் கேட்டபோது, “ஆதி காலத்தில் புறாவே செய்திகளை கொண்டு செல்லும் தூதுவனாக செயல்பட்டதை உலகமே அறியும்.

 

சமாதானத்தின் சின்னமே புறா. வெளிநாடுகளின் ஆயிரம் கிலோ மீற்றர் பறக்கும் புறா ஓட்டப் பந்தயங்கள் உள்ளன.

 

அவற்றைப் பார்வையிட்டே 2013 இல் பரீட்சாத்தியமாக யாழ்ப்பாணத்திலிருந்து எனது வளர்ப்பு புறாக்கள் எட்டு ஜோடிகளை பறக்கவிட்டேன். அவை 4 மணித்தியாலம் 40 விநாடிகளில் அதன் வத்தளை கூடுகளுக்கு வந்து சேர்ந்தன.

 

இது போன்று 2014 இல் அனுராதபுரத்தில் வைத்து பறக்கவிட்டேன். இரண்டு மணித்தியாலயம், 24 நிமிடங்களில் இங்கு வந்து சேர்ந்தன” என அவர் தெரிவித்தார்.

 

எவ்வாறு கடந்த 13 ஆம் திகதி உலகமே வியக்கும் வகையில் புறாவின் கால்களில் செய்தியை இணைத்து அனுப்பி வெற்றி பெற்றீர்கள்? எனவும் கேட்டோம்.

 

“அது எனது முயற்சியின் வெற்றியாகும். அனுராதபுரத்தைச் சேர்ந்த வர்த்தகரான எனது  நண்பரின் உதவியுடன் இந்த நடவடிக்கையை கடந்த 13 ஆம் திகதி காலையில் அனுராதபுரம் டீ.எஸ். சேனாநாயக்க வித்தியாலயம் ஏற்பாடு செய்திருந்தது.

 

எனது நண்பர் மேற்படி பாடசாலை மாணவர்களுக்கு பழங்கால தொலைத் தொடர்பை விளக்கும் வகையில் இந் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.

 

இதன்படி, 12 புறாக்களுடன் நானும் எனது மனைவி, உதவியாளர்களுடன் அனுராதபுரம் சென்று அன்று (13 ஆம் திகதி) முற்பகல் 8.26 மணிக்கு ஆறு புறாக்களின் கால்களில் இரகசிய செய்திகளை கட்டி பறக்கவிட்டேன். 

 

அதாவது ஆறு புறாக்களின் கால்களிலும் எனது நண்பரினதும் ஊடகவியலாளர்களினதும் தொலைபேசி இலக்கங்களே கடதாசியில் எழுதி கட்டி பறக்கவிடப்பட்டன.

 

அதே தினம் சரியாக முற்பகல் 10.45 க்கு வத்தளை ஹெந்தளை சந்திக்கு அருகாமையில் உள்ள எனது இல்லத்தை புறாக்கள் வந்தடைந்தன.

 

இங்கு எனது மகன் சகிதம் இருந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் ஆறு புறாக்களினதும் கால்களில் கட்டப்பட்டு இருந்த செய்தி கடதாசியை பிரித்து அத் தொலைபேசி இலக்கங்களை தொலைபேசியூடாக மேற்படி பாடசாலை அதிபருக்கு தெரிவிக்க செய்தி பரிமாற்றத்தின் நம்பகத் தன்மை உறுதி செய்யப்பட்டது.

 

முதலாவது புறா இரண்டு மணித்தியாலம் 13 நிமிங்களிலும் இரண்டாவது புறா 1 நிமிடம் கழித்தும் வந்து சேர்ந்தன. ஏனையவை ஒன்றன்பின் ஒன்றாக ஹெந்தளை சந்திக்கு தத்தமது கூடுகளுக்கு வந்து சேர்ந்தன” என அவர் தெரிவித்தார்.

 

சுமார் 198 கிலோ மீற்றர் தூரத்தை புத்தளம் வழியாக வானத்தில் பறந்து இரகசியத் தகவலை வழங்கிய புறாக்களை எமக்கு அடையாளம் காட்டினார்.  

 

எதிர்காலத்தில் இப் புறாக்கள் மூலமாக இன்னும் பல சாதனைகளை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

 

ஓர் ஆண் புறா தனது ஜோடியான ஒரு பெண் புறாவிடம் மட்டுமே உறவை பேணும் என்பது உண்மையா? எனக் கேட்டோம்.

 

“உண்மைதான். ஒருத்திக்கு ஒருவன் என்ற முறையை புறாக்கள் இன்னும் பேணி வருகின்றன. ஓர் ஆண் புறா தன் ஜோடிப் புறாவைத் தவிர வேறு பெண் புறாவுடன் இனச்சேர்க்கை உறவில் ஈடுபடாது.

 

அதோ பாருங்கள் புறாக் கூட்டை ஆண், பெண் தனியாகவே பிரித்து கூடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இன்று பெண் புறாவை வெளியே பறக்கவிட்டால் நாளை ஆண் புறாவை வெளியே விடுவேன்.

 

சில நாட்களில் ஆண், பெண் புறாக்களை வெளியே பறக்க விடுகையில் எல்லா இடமும் சுற்றித்திரிந்து கூடுகளை எட்டியதும் அவைகள் கொஞ்சி விளையாடும் என்றார்.

 

புறாவைத் தவிர்த்து வேறு என்ன பறவைகள் உள்ளனவா? எனக் கேட்டதும் அவரின் வீட்டுக்குள் சுதந்திரமாக திரிந்த பஞ்சவர்ணக் கிளி ஒன்றை காட்டினார்.

 

ஒரு அடிக்கும் அதிகமான நீளத்தையும் கோழியைப் போன்ற உயரத்தையும் கொண்ட பஞ்ச வர்ணக் கிளியைக் கண்டதும் பயந்து போய்விட்டோம்.   

 

பெரும் சத்தத்துடன் அவ் வீட்டு காவலாளியை அழைத்தது கிளி. பின்னர் பெரும் சத்தத்துடன் கூவி, நாம் அமர்ந்திருந்த கதிரையில் அமர்ந்துகொண்டு எம்மையே பார்த்து முறைத்தது.

 

இக் கிளி தென் அமெரிக்காவைச் சேர்ந்ததாம். கோழியைப்போன்று அட்டகாசமாக இருந்த அக் கிளியின் வயது பதினெட்டு மாதங்கள் மட்டுமே ஆகும். இக் கிளி தன் காணியின் எல்லையை விட்டு வெளியே போகாது என்ற தகவலையும் லெனரோல் வழங்கினார்.

 

மற்றுமொரு கிளியையும் அவர்  காட்டினார். அந்த கிளி அமேசன் வர்க்கத்தைச் சேர்ந்தது. எங்களை கண்டதும் தன் சொண்டால் மணியை எடுத்து அடித்து காவலாளியை அழைத்தது.

 

கிளிகள் இரண்டும் பெரிதாக சத்தமிட்டு கூவ, நாங்கள் லெனரோலிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம். 

 

மன சந்தோச துணிவானது நம் உள்ளத்தில் எந்த அளவுக்குத் தீவிரமாகக் கொழுந்து விட்டு எரிகிறதோ, அந்த அளவுக்கு வாழ்க்கையும் நமக்குச் சுவையாக இருக்கும் என்பதற்கு இன்றைய இளம் சமூகத்தினருக்கு, 72 வயதான மோகான் டீ லெனரோலின் வாழ்க்கை நல்ல பாடமாக இருக்கும். ''முயற்சி இருந்தால் சாதனைகளை படைக்கலாம்''

 

 

[படங்கள் : கே.பி.பி. புஷ்பராஜா]

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.